செய்திகள்
மத்திய அரசு

ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு

Published On 2020-12-04 06:52 GMT   |   Update On 2020-12-04 11:11 GMT
10-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும் வகையில் ஜனவரி 4-ந் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமாக இந்த அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதல் -மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

எங்கள் அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதிக்குள் திறக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றால் தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஏப்ரல், மே மாதத்தில் தேர்வுகளை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த மாதங்களில் பொதுத் தேர்தல் ஏதேனும் குறுக்கிடுகிறதா என்பதை அறிவதற்காக தேர்தல் கமி‌ஷனிடமும் தகவல் கேட்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News