செய்திகள்
தென்னை சாகுபடி

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தென்னை சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்

Published On 2021-07-31 08:19 GMT   |   Update On 2021-07-31 08:19 GMT
தற்போது தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் பிற மாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனம் மூலம் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இரு வட்டாரங்களிலும் தென்னை சாகுபடி பிரதானமாகவும், மக்காச்சோளம், தானியங்கள், காய்கறி சாகுபடி  சீசன்தோறும் சாகுபடியாகிறது. 

இதில் சீசன் சாகுபடிகளுக்கு தொழிலாளர் தேவை அதிகமாக உள்ளது. காய்கறி சாகுபடியில் குறிப்பிட்ட இடைவெளியில் களை பறித்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களால்  அனைத்து கிராமங்களிலும் விவசாய சாகுபடிக்கான தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே பெரும்பாலான கிணற்றுப்பாசன விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறத்துவங்கியுள்ளனர். தென்மேற்கு பருவமழை சீசனையொட்டி இரு வட்டாரங்களிலும் தற்போது புதிதாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் நாற்றுப்பண்ணைகளில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்னை சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் தொழிலாளர் தேவை குறைவாகவே உள்ளது. பிற சாகுபடியில்  குறித்த நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் பிற மாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். இதனிடையே தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில்  சாகுபடியை ஊக்குவிக்க இளம்தென்னை வளர்ப்பு மானியம் வழங்கப்பட்டு வந்தது.

மானியம்பெற அரசு அங்கீகாரம் பெற்ற நாற்றுப்பண்ணையில் இருந்து தென்னங்கன்றுகள் வாங்கி அதற்கான ரசீது வைத்திருக்க வேண்டும். வேளாண்துறையினர் ஆய்வு செய்து தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு பரிந்துரைப்பார்கள்.

இதில் 2.45 ஏக்கருக்கு இரண்டாண்டுகளுக்கு ரூ. 6,500 வரை மானியம் கிடைத்து வந்தது. தற்போது இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் கிடைப்பதில்லை. வேளாண்துறையினர் தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக இம்மானியத்தை பெற்றுத்தரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News