ஆன்மிகம்
மாலை மாற்றுதல் நிகழ்ச்சியின்போது தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சாமியை அம்பாள் வலம் வந்த காட்சி.

ராமேசுவரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா:சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

Published On 2021-08-12 05:22 GMT   |   Update On 2021-08-12 05:22 GMT
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகின்றன.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருவிழாவின் 11-வது நாளான நேற்று சாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் 3-ம் பிரகாரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமநாதசாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் 3-ம் காலத்திற்கு எழுந்தருளினார்.

பின்னர் சாமியை அம்பாள் 3 முறை சுற்றி வரவே சாமி கழுத்திலிருந்து அம்பாள் கழுத்திலும், அம்பாள் கழுத்திலிருந்து சாமி கழுத்திலும் மூன்று முறை மாலை மாற்றப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் கோவிலின் தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டபத்தில் வைத்து வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 2-வது ஆண்டாக மாலை மாற்றும் நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News