செய்திகள்
கிருதுமால் நதியில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள்.

கிருதுமால் நதியில் அதிக தண்ணீர் செல்வதால் 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதி

Published On 2021-11-24 14:37 GMT   |   Update On 2021-11-24 14:37 GMT
கிருதுமால் நதியில் அதிக தண்ணீர் செல்வதால் 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்புவனம்:

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பழையனூர். இதன் அருகே கிருதுமால் நதி தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலம் வழியாக வல்லாரேந்தல், ரெட்டகுளம், ஆலாத்தூர், தச்சனேந்தல், தாமரைகுளம், அழகாபுரி, ஓடாத்தூர், எஸ்.வாகைகுளம், பிரான்குளம், சிறுவனூர், அருணகிரி, நன்றுகாட்சி, உளுத்திமடை, எழுவணி, சேந்தநதி, குண்டுகுளம் ஆகிய 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த தரைப்பாலம் வழியாக பழையனூருக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள்.

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி பழையனூரில் உள்ளதால் மாணவ-மாணவிகள் கல்வி கற்கவும், நோயாளிகள் வைத்தியம் பார்க்கவும் வரவேண்டிய நிலை உள்ளது. 16 கிராமங்களில் சில கிராமங்கள் சிவகங்கை மாவட்டத்திலும் பல கிராமங்கள் விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளது. மேலும் இப்பகுதி கிராம மக்கள், மதுரை வந்து செல்ல வேண்டுமானால் பழையனூர் வந்து பிறகு திருப்புவனம் வழியாக செல்ல வேண்டும்.

பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெறும் காலங்களில் வருவார்கள். இந்த கிருதுமால் நதி தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகம் வந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் மாணவ-மாணவிகள் நிலை மோசமடைந்து விடும். காரணம் இடுப்பளவு தண்ணீரில் சுமார் 200 அடி நீளத்திற்கு நடந்து வரவேண்டும். பள்ளி சீருடைகள் நனைந்து விடுகின்றன. சிலசமயம் புத்தகப் பைகள் நனைந்து விடுகிறது. நனைந்த சீருடையுடன் தான் வகுப்பறை செல்லவேண்டிய நிலை. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் நோயாளிகள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்த்து விட்டு பிறகு தண்ணீரில் நடந்து வீட்டுக்கு செல்லவேண்டும். இதனால் நோயின் தன்மை அதிகரிக்கின்ற சூழ்நிலை உருவாகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து போக்குவரத்து தடைபட்டால் நிலைமை மோசமாக இருக்கும். மேலும் தரைப்பாலம் வழியாக நடந்து செல்லும் போது தண்ணீர் கூடுதலாக வந்துவிட்டால் எங்களை இழுத்துச் சென்றுவிடும்.

தரைமட்ட பாலம் வேண்டாம். உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அதிகாரிகள் கடந்த வருடம் தரைமட்ட பாலம் புதிதாக அமைத்தனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்தோம். இந்தப் தரைப்பாலத்தில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் கூடுதலாக வருவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் அளவு தெரிவதற்காக மக்கள் கம்பு ஊன்றியும் நீளமாக கயிறு கட்டியும் சிவப்பு துணியை கட்டி தொங்க விட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கிருதுமால் நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News