தொழில்நுட்பம்
சுந்தர் பிச்சை

கொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்

Published On 2020-03-18 07:15 GMT   |   Update On 2020-03-18 07:15 GMT
கூகுள் நிறுவனம் தனது யூடியூப் தளத்தில் கொரோனா வைரஸ் பற்றிய போலி வீடியோக்களை நீக்கும் பணிகளை மேற்கொள்கிறது.



கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கி வருவதாக தெரிவித்தார். இதற்கென செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இதுவரை கொரோனா வைரஸ் பற்றி யூடியூபில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வீடியோக்களை நீக்கி இருப்பதாக சுந்தர் பிச்சை தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இத்துடன் மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகளுக்கான விளம்பரங்களுக்கு கடந்த வாரம் முதல் தற்காலிக தடை விதித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.



கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக கூறும் நிரூபிக்கப்படாத வழிமுறைகள் அடங்கிய வீடியோக்களை தொடந்து நீக்கி வருகிறோம். கூகுள் மேப்ஸ் சேவையில் போலி விமர்சனங்கள் உடல்நல மையங்கள் சார்ந்த போலி விவரங்களை நீக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்சமயம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கக் கோரும் ஐந்து வழிமுறைகளை கூகுள் வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது.

இத்துடன் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கூகுள் (Google.org) சார்பில் ஐந்து கோடி டாலர்கள் வழங்கப்படுவதாகவும், அறிவியல், மருத்துவம், கல்வி மற்றும் சிறு வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News