ஆன்மிகம்
ஐயப்பன்

பெங்களூரு கலாசி பாளையாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2020-11-16 09:02 GMT   |   Update On 2020-11-16 09:02 GMT
பெங்களூரு கலாசி பாளையாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை நடக்கிறது.
பெங்களூரு கலாசிபாளையாவில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில்(ஆங்கிலத்தில் நவம்பர் மாதம்) இந்த கோவிலில் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம்(டிசம்பர்) 26-ந் தேதி நடக்கிறது. முன்னதாக ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

ஜனவரி மாதம் 14-ந் தேதி அன்று காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கின்றன. அப்போது பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. பின்னர் சபரிமலையில் மகர ஜோதி ஏற்றப்படும் நேரத்தில் இந்த கோவிலில் மகர சங்கராந்தி கற்பூர திவ்ய ஜோதி பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குருசாமி குமாரசாமி தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் செய்துள்ளனர்.
Tags:    

Similar News