செய்திகள்
உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அப்புறப்படுத்திய காட்சி

உக்ரைன் விமான விபத்திற்கு அமெரிக்க மின்னணு குறுக்கீடுகள் காரணமா? -ஈரான் விசாரணை

Published On 2020-01-16 05:48 GMT   |   Update On 2020-01-16 05:48 GMT
ஈரானில் உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் (எலக்ட்ரானிக்) குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் கருதுவதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்:

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் பலியாயினர்.

அமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வல்லரசு நாடுகள் அனைத்தும் ஈரானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் தண்டிப்போம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அறிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் ஆயுதப்படை பொது தலைமையகத்தின் துணைத் தளபதி அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார். 

‘ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்தது. அமெரிக்க மின்னணு (எலெக்ட்ரானிக்) கூறுகளின் குறுகீடு காரணமாக ஈரானின் ரேடார் நெட்வொர்க்கில் இடையூறு ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய சாத்தியத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது’ என அலி அப்துல்லாஹி கூறியுள்ளார். 
Tags:    

Similar News