உள்ளூர் செய்திகள்
தடையை மீறி சேவல் சண்டை நடத்தியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் தனியார் குடோனில் சேவல் சண்டை போட்டி: 10 வாகனங்கள் பறிமுதல்-ஒருவர் சிக்கினார்

Published On 2022-01-15 07:52 GMT   |   Update On 2022-01-15 07:52 GMT
சேவல் சண்டை நடத்துபவர்கள் விதிகளை மீறி செயல்பட்டதால் இந்த ஆண்டும் வருகிற 25-ந்தேதி வரை எந்தவிதமான சேவல் சண்டைகளும் நடத்தக் கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தில் ஆண்டுதோறும் சேவல்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப்போட்டியில் கரூர் மட்டுமல்லாமல் கோவை, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சேவல் பிரியர்கள் வந்து போட்டியில் பங்கேற்பார்கள்.

இதில் 2 சேவலை மோத விடுவார்கள். சண்டையில் தோற்கும் சேவலை அதன் உரிமையாளர் விட்டுச் செல்வார். வெற்றி பெறும் சேவலின் உரிமையாளர் எடுத்துச் சென்று விடுவார்.

இவ்வாறு நடந்து வந்த போட்டி ஒருகட்டத்தில் சேவலின் காலில் கூர்மையான கத்தியை கட்டி மோத விடும் கலாச்சாரமாக மாறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கத்தி கட்டி மோத மோத விட்டதால் சேவலின் காலில் கட்டிய கத்தி பார்வையாளர்களை பதம் பார்த்தது.

இதில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பூலாம்வலசு சேவல்கட்டு போட்டிக்கு கோர்ட்டு தடைவிதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவல்கட்டு போட்டி நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.

ஆனாலும் சேவல் சண்டை நடத்துபவர்கள் விதிகளை மீறி செயல்பட்டதால் இந்த ஆண்டும் வருகிற 25-ந்தேதி வரை எந்தவிதமான சேவல் சண்டைகளும் நடத்தக் கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமா நிலையூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் சிலர் சேவல் சண்டை நடத்துவதாக பசுபதி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனியார் குடோனுக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் தலை தெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் பாலாஜி என்ற வாலிபரை மட்டும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சேவல் சண்டைக்கு பயன்படுத்திய 3 சேவல்களை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது

நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டையில் சம்பவ இடம் முழுவதும் ரத்தக்காடாக காட்சி அளிக்கப்பட்ட நிலையில் சேவல் சண்டையின்போது சேவல்களின் கால்களில் கத்தி பயன்படுத்தப்பட்டதா? அதில் வி‌ஷம் ஏதும் தடவப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News