செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் மின்தடை இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிப்பு- அமைச்சர் தகவல்

Published On 2021-10-20 23:10 GMT   |   Update On 2021-10-20 23:10 GMT
இந்திய மின்சந்தையில் உள்ள விலை நிர்ணயப்படி தான் கொள்முதல் செய்திருக்கிறோம். சிலர் விவரம் தெரியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் குறுகிய நோக்கிலும் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மண்டல தலைமை என்ஜினீயர்களுடன் விரிவான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இதில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்தடை ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் முதல்-அமைச்சர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அதன்படி, எந்த இடங்களிலும் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வாரியத்தின் மொத்த நிறுவுதிறன் 4 ஆயிரத்து 320 மெகாவாட் ஆகும். இதில் கடந்த ஆட்சியில் 1,800 மெகாவாட் அளவு தான் உற்பத்தி செய்தார்கள். முதல்-அமைச்சரின் அறிவுரைகளை பின்பற்றியதை தொடர்ந்து தற்போது நம்முடைய சொந்த உற்பத்தி 3 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம். நம்முடைய ஒருநாள் சராசரி தேவை 320 மில்லியன் யூனிட். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 24.9.2021 முதல் 19.10.2021 (நேற்று முன்தினம்) வரை நாம் சந்தையில் 397 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்திருக்கிறோம்.

இந்த கால கட்டங்களில் 6 ஆயிரத்து 200 மில்லியன் யூனிட் வினியோகம் செய்துள்ளோம். இந்த 397 மில்லியன் யூனிட் சந்தையில் கொள்முதல் செய்ததில் 65 மில்லியன் யூனிட் தான் ரூ.20-க்கு கொள்முதல் செய்தோம். இது மொத்த தேவைகளில் ஒரு சதவீதம் தான். இந்திய மின்சந்தையில் உள்ள விலை நிர்ணயப்படி தான் கொள்முதல் செய்திருக்கிறோம்.

சிலர் விவரம் தெரியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் குறுகிய நோக்கிலும் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். கடந்த கால ஆட்சியில் மின்சாரத்துறையில் ஏற்பட்ட சீர்கேடுகள் களையப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்றாற்போல், மின்சாரத்துறை செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News