ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போது எடுத்தபடம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேவை நேரம் அதிகரிப்பு

Published On 2020-10-05 02:59 GMT   |   Update On 2020-10-05 02:59 GMT
பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதும் ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்வது அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம்.

இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்ரீரங்கம் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சுவாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்வது கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான நேற்று காலை முதலே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நேற்று சேவை நேரமும் அதிகரிக்கப்பட்டது. மூலவர் ரெங்கநாதர், தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடை அடைக்காமல் மூலஸ்தான சேவை நடைபெற்றது.

பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை சேவை நடைபெற்றது. நேற்று 3-வது சனிக்கிழமை என்பதால் விரதம் முடித்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News