லைஃப்ஸ்டைல்
கொரோனாவால் துணையை இழந்த பெண்களுக்கு மனநல ஆலோசனைகள்

கொரோனாவால் துணையை இழந்த பெண்களுக்கு மனநல ஆலோசனைகள்

Published On 2021-06-25 04:37 GMT   |   Update On 2021-06-25 04:37 GMT
சாதாரணமாகவே குடும்பத்தில் கணவன் இறந்து விட்டால் அதை மனைவியால் ஏற்றுக்கொள்வது மிகக்கடினம். இந்த கொரோனா காலகட்டத்தில் அது பல மடங்கு கஷ்டத்தை கொடுத்து விடும்.
கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களது அன்புக்குரியவர்களை கொரோனாவுக்கு பறிக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் துணையை பறிகொடுத்த பல பெண்கள் மனதளவில் வலுவிழந்து நிற்கிறார்கள்.

ஒரு கூட்டு பறவை போல் வாழ்ந்த பிறகு குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் அதை அவ்வளவு எளிதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இழப்பு என்பது ,ஈடுசெய்ய முடியாத ஒன்று. தற்போது கொரோனாவால் சிறிய வயதினர் கூட மரணமடைவதை பார்க்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் நன்றாக பேசிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுகிறார். யாரும் எதிர்பாராத தருணத்தில் தொற்று தீவிரமடைந்து மரணமடைந்து விடும்போது அவரதுமனைவியால் அதை அத்தனை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

எப்படி அவர் இறந்தார்?என்ற கேள்வி முதலில் எழும். இரண்டாவது நிஜமாகவே இறந்துவிட்டாரா? இல்லை இது கனவா? என்ற எண்ணம் எழும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றால் ஏன் அவரை பறித்து கொண்டாய்? என கடவுளிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். உலகமே இருண்டது போல் உணர்வார்கள். அடுத்ததாக அவரது இழப்பை புரிந்து கொண்டு அதை ஏற்று கொள்ள முயன்று அதிகப்படியான மனஅழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு தேவை ஆறுதல் ஒன்றுமட்டும் தான்.

சாதாரணமாகவே குடும்பத்தில் கணவன் இறந்து விட்டால் அதை மனைவியால் ஏற்றுக்கொள்வது மிகக்கடினம்.  இந்த கொரோனா காலகட்டத்தில் அது பல மடங்கு கஷ்டத்தை கொடுத்து விடும். ஏனெனில் நம் சமூகத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வது வழக்கம். கொரோனாவால் கணவனை இழந்த மனைவிக்கும் அந்தஆறுதல் கிடைக்காது. கடைசியாக ஒருமுறை கணவரை கட்டி அணைத்து முத்தமிட்டு கூட வழியனுப்ப முடியாது. சொந்தங்கள் கைகளை பற்றி கொண்டு ஆறுதல் அளிக்க முடியாது.

இந்த கொடூரமான சூழலில் துணையை இழந்து மனஅழுத்தத்தில் தவிக்கும் அத்தகைய பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினர் நிச்சயமாக பக்க பலமாக இருக்க வேண்டியது மிக அவசியம். நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியாது என்பதால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். ஆறுதலாக நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்.

கணவனை இழந்தவுடன் கணவன், தகப்பன் மகன் என அவருக்குரிய அத்தனை பொறுப்புகளும் மனைவி மீது வந்துவிடும். திடீரென எப்படி? எங்கேபோய் சம்பாதிப்பது? எப்படி குழந்தைகளை படிக்க வைப்பது குடும்பக்கடனை என்னால் எப்படி அடைக்க முடியும்? என்று எதிர்மறையாக யோசிக்காமல் என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்து சென்றிருக்கிறார். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். என்னால்  அது முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்கள். இது நிச்சயம் சிக்கலான நேரம். ஆரோக்கியமான நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல திட்டம் செயல்படுகிறது. மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தவறானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதைய சூழலில் ஆறுதலும், நம்பிக்கையும் புன்சிரிப்பும் அவர்களுக்கு தேவை. குடும்பத்தினரும் , நண்பர்களும் அரசும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அவர்கள் மீண்டு வருவார்கள்.
Tags:    

Similar News