ஆன்மிகம்
காரமடை அரங்கநாதர் கோவில் கொடியேற்றம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

காரமடை அரங்கநாதர் கோவிலில் கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-02-23 03:36 GMT   |   Update On 2021-02-23 03:36 GMT
கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவிலாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திருமுளை நகர சோதனை என்கிற கிராம சாந்தி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கொடிமரத்திற்கு கீழ் வீற்றிருக்கும் கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி யாகசாலை மண்டபத்தில் தொடங்கியது.

திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள், வேத வியாசர்கள், சுதர்சன பட்டர் சுவாமிகள், ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கருடாழ்வர் சின்னம் பதித்த கொடிக்கு வேதமந்திரங்கள் ஓத சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதன்பின்னர் வேத கோஷங்கள் முழங்க, கோவில் உள்பிரகாரம் வலம் வந்து காலை 11.15 மணிக்கு கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பதித்த கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடியேற்றத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா... ராமா... கோவிந்தா... கோபாலா... என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் கருடன் வானத்தில் வட்டமிடும் நிகழ்ச்சி சிறப்பம்சமாகும்.

கொடியேற்ற விழாவில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், தொழில் அதிபர் எம்.எம்.ராமசாமி, கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணன், காரமடை பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.டி.ஆறுமுகசாமி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.ராஜ்குமார், கோவில் மிராசுதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு கொடியேற்ற கட்டளைதாரர்களுக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இரவு 8.30 மணிக்கு அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது. 25-ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பும், 26-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 28-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழாவும், 2-ந் தேதி உற்சவ பூர்த்தி விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
Tags:    

Similar News