செய்திகள்
சிறுத்தை

ஆசனூர் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு

Published On 2021-10-16 09:41 GMT   |   Update On 2021-10-16 09:41 GMT
ஆசனூர் அருகே புலி மற்றும் சிறுத்தை அருகே உள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்பட பல வன விலங்குகள் உள்ளன.

வனப்பகுதிக்கு உட்பட்ட ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் இருந்து வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெளியேறி சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து சென்று வருகிறது.

மேலும் புலி மற்றும் சிறுத்தை அருகே உள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை வெளியேறி ஆசனூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அந்த சிறுத்தை அங்கும், இங்கும் நடந்து சென்று கொண்டே இருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு கோழியை துரத்தியது.

தொடர்ந்து சிறுத்தை ஒரு நாயை அடித்து இழுத்து சென்றது.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது காண்காணிப்பு கேமிரா மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சிறுத்தை கால்தடங்கள் இருப்பதும் பதிவாகி உள்ளது. வன ஊழியர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம்.

இவ்வாறு வனத்துறையினர் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News