செய்திகள்
24 மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மூலம் ஆண்டுக்கு 24 மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு - தர்மபுரி கலெக்டர் தகவல்

Published On 2021-10-14 10:04 GMT   |   Update On 2021-10-14 10:04 GMT
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 24 மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
தர்மபுரி:

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செந்தில்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தற்போது தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறப்பு டாக்டர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு மொத்தம் 24 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான சிறப்பு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன.

இந்த முகாமின்போது சித்த மருத்துவ பல்துறை கண்காட்சி மற்றும் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட விளக்க கண்காட்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் செயல்படும். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த முகாமில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி, தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்குமார், ஊராட்சி தலைவர் கலைவாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலிங்கம்‌ உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News