செய்திகள்
மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா

காஷ்மீர் அரசியல்வாதிகளின் குழந்தைகள் சொகுசாக வாழ இளைஞர்கள் பலியாகின்றனர் - ஆளுநர் குற்றச்சாட்டு

Published On 2019-10-22 17:04 GMT   |   Update On 2019-10-22 17:04 GMT
காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் சொகுசாக வாழவைத்துவிட்டு இங்குள்ள இளைஞர்கள் சாக வழிவகுக்கின்றனர் என ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று ஜம்முவில் உள்ள பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், வசதி மற்றும் சக்தி படைத்தோர் இங்குள்ள இளைஞர்களின் கனவுகள் மற்றும் வாழ்க்கையை அழித்துள்ளனர். 

இங்குள்ள சமூகத் தலைவர்கள், மதபோதகர்கள், பிரிவினைவாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அப்பாவி காஷ்மீர் மக்களின் குழந்தைகள் உயிரிழக்க வழிவகை செய்கின்றனர். 

ஆனால் அவர்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் யாரும் பயங்கரவாத குழுக்களில் இணையவில்லை. இதுதான் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

நான் இங்கு தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத 25 முதல் 30 வரை வயதுடைய 150 முதல் 200 வரையிலான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நேரடியாக பேசினேன். 

அவர்களிடம் பேசும்போது நான் கவனித்தது என்னவென்றால் அந்த இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு, தவறான வழிக்கு திருப்பி விடப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளனர்.

அவர்கள் பிரிவினைவாதம், டெல்லி அரசு, மாநில அரசு, தன்னாட்சி உரிமை என எதையும் விரும்பவில்லை. மாறாக செர்க்கத்திற்கு செல்ல தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.    



காஷ்மீர் மக்களும் இளைஞர்களும் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான பகுதியில் வாழ்ந்து வருகிறீர்கள். உங்கள் கரங்களை டெல்லிக்கு தாருங்கள். அது உங்களுக்கு புதையலை (பணக்குவியல்) வழங்கும். 

நாங்கள் ஒன்றும் உங்கள் இடத்தை வேறு எங்கும் எடுத்துச் செல்லவில்லை. காஷ்மீரின் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறி வாருங்கள். 

காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தங்கள் கல்வியை பயில வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய சூழல் நிலவி வருகிறது. ஏனென்றால் பல ஆண்டுகளாக இங்கு போதுமான கல்வி நிலையங்கள் இல்லை. 

இதுவரை காஷ்மீரில் இருந்து உருவான பணத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இங்குள்ள மக்களின் வீடுகளில் தங்கத்தால் கூரை அமைத்திருக்கலாம். 

உயிர்த் தியாகம் செய்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். ஆனால் நீங்கள் காஷ்மீர் என்னும் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News