செய்திகள்
பிரதமர் மோடியை வரவேற்ற அதிகாரிகள்

கமலா ஹாரிசை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

Published On 2021-09-23 09:10 GMT   |   Update On 2021-09-23 09:10 GMT
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனை நாளை சந்தித்து பேசுகிறார். இது அவர்களிடையே நடக்கும் முதல் சந்திப்பு ஆகும்.
வாஷிங்டன்:

கொரோனா காரணமாக பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லவில்லை. கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி அண்டை நாடான வங்காள தேசத்துக்கு மட்டும் சென்று வந்தார்.

இந்தநிலையில் 6 மாதத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று 4 நாள் பயணமாக அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோபைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வானதற்கு பிறகு பிரதமர் மோடி இதுவரை ஜோபைடன், கமலா ஹாரிசை சந்திக்கவில்லை.

பிரதமர் நேற்று பகல் 11 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது விமானம் வாஷிங்டன் சென்றடைந்தது. அதன் பிறகு சிறிதுநேரம் ஓய்வு எடுத்துவிட்டு அலுவல் பணிகளை தொடங்கினார்.

அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை (சி.இ.ஓ.) சந்தித்து பேசினார். தனித்தனியாக இந்த சந்திப்பு நடந்தது. குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி அடில் டியோனா அமானி, அடால்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயணன், சோலார் நிறுவனத்தின் நிர்வாகி மார்க் விட்மார், ஜெனரல் அட்டோமிக் நிறுவனத்தின் நிர்வாகி விவேக்லால், பிளார்ன்டோ நிர்வாகி ஸ்டீபன் சவர்ஸ்மேன் மற்றும் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

அதன் பிறகு துணை அதிபரும், தமிழக வம்சாவளியைக் கொண்டவருமான கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசுகிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 12.45 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.



முன்னதாக இரவு 11 மணியளவில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனை நாளை சந்தித்து பேசுகிறார். இது அவர்களிடையே நடக்கும் முதல் சந்திப்பு ஆகும்.

இந்தியா- அமெரிக்கா நட்புறவை தொடர்வது, கொரோனாவை எதிர்த்து போராடும் பணிகளை ஒருங்கிணைந்து செய்வது பற்றி பேசப்படுகிறது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

இதன் பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் குவாட் மாநாடு நடைபெறுகிறது. அதில் 4 நாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

அதன் பிறகு பிரதமர் மோடி வாஷிங்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க் நகருக்கு செல்கிறார். நாளை மறுதினம் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் மோடி பங்கேற்று 100 நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார்.

கொரோனா மற்றும் பயங்கரவாத செயல்களை எதிர்கொள்வது தொடர்பாக இந்த சபையில் விவாதிக்கப்பட உள்ளது. அதன் பிறகு மோடி 25-ந்தேதி இரவு இந்தியாவுக்கு புறப்படுகிறார். 26-ந்தேதி காலை 11.30 மணியளவில் அவர் டெல்லி திரும்புகிறார்.

Tags:    

Similar News