செய்திகள்
கோப்புபடம்

அதிக மழை பெய்தும் அவிநாசியில் நிரம்பாத குளம், குட்டைகள் - அத்திக்கடவு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல்

Published On 2021-11-30 06:20 GMT   |   Update On 2021-11-30 06:20 GMT
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அவிநாசி:

ஆண்டுக்கு சராசரியாக, 600 மி.மீ., மழையளவு மட்டுமே கொண்ட அவிநாசியில் இந்தாண்டு அதிகபட்ச மழை பெய்ததது. அவிநாசியை சுற்றியுள்ள கருவலூர், கானூர், சேவூர், கருமாபாளையம், நடுவச்சேரி, துலுக்கமுத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன.

நிலத்தடி நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இதுவரை நிரம்பி ததும்பாத ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் கூட வெள்ளம் வழிந்தோடுகிறது. இருப்பினும், அவிநாசியின் பிரதான குளங்களாக பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர் உள்ளிட்ட குளங்கள் நிரம்பவில்லை.

அதிகபட்ச மழை பெய்தும் 20 சதவீதம் அளவுக்கு கூட தண்ணீர் இல்லை. அதற்கு காரணம் இந்த குளங்களுக்கு வரும் நீர்வழிப்பாதைகள் பல இடங்களில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டதுடன் கிராம ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களின் சார்பில் ஆங்காங்கே தடுப்பணை கட்டப்பட்டும், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வழிந்தோடி வரும் மழைநீர் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும் தான்.

இந்நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் 32 பொதுப்பணித்துறை குளங்களில் நீர்நிரப்ப திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் திருப்பூர் மாவட்டத்தில் 21 குளங்களில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் அவிநாசி தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர் குளம் உள்ளிட்டவையும் அடங்கும்.

இதுகுறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவை சேர்ந்த வேலுசாமி கூறுகையில்:

“வரலாறு காணாத மழை பெய்தும் பொதுப்பணித்துறை குளங்கள் நிரம்பவில்லை. இதனால் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் காலத்தின் கட்டாயமாகவும், தவிர்க்க முடியாததாகவும் மாறியுள்ளது.

இத்திட்டப்பணிகளை விரைவாக முடித்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று திட்டத்தின் கீழ் விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Tags:    

Similar News