செய்திகள்
ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் வன்முறை வழக்கு... மத்திய மந்திரி மகனிடம் தீவிர விசாரணை

Published On 2021-10-09 16:07 GMT   |   Update On 2021-10-09 16:07 GMT
லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணையின்போது, மத்திய மந்திரி மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வன்முறை வெடித்தது. இதிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. முதல் சம்மன் அனுப்பியபோது அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 



இதனையடுத்து, போலீசார் புதிய சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று ஆஷிஷ் மிஸ்ரா  விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார்  துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணைக்காக அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

சம்பவம் நடந்த சமயத்தில் அந்த காரில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அக்டோபர் 3ம் தேதி சம்பவம் நடந்த நேரமான 2:36 முதல் 3:30 மணி வரை அவர் எங்கு இருந்தார் என்பதற்கான ஆதாரத்தை விசாரணையின்போது அவரால்  வழங்கமுடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News