செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-09-29 01:41 GMT   |   Update On 2020-09-29 01:41 GMT
திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள், சந்தைகள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்? தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று எத்தனை பேர் உயிர் பிழைத்தனர்? எத்தனை பேர் உயிர் இழந்தனர்? தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு படுக்கை உள்ளிட்ட இதர வசதிகள் என்னென்ன உள்ளது? என்பது குறித்த விவரத்தை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வி.ராகவாச்சாரி, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிடும் புள்ளிவிவரத்துக்கும், தமிழக அரசு வெளியிடும் புள்ளிவிவரத்துக்கும் முரண்பாடு உள்ளது. பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனரா? என்று கண்காணிக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.விஜயகுமார், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை செய்திக்குறிப்பாக தினமும் காலை 9 மணி, மாலை 6 மணி என்று இருமுறை தமிழக அரசு வெளியிடுகிறது. இதில், அனைத்து விவரங்களும் மாவட்ட வாரியாக வழங்கப்படுகின்றன” என்று வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் வக்கீல் சுனிதாகுமாரி ஆஜராகி வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி வெளியிடும் கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரத்தில் சில முரண்பாடு உள்ளது. எனவே கொரோனா தொற்றால் மாநகரங்கள், மாவட்டங்கள் அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரியானதாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் ஒன்றாக வெளியிட வேண்டும். செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் அரசு இணையதளம் சேவையை 2 வாரத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடும்போது, அவர்கள் முறையாக முக கவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும். அதில், யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் வழங்க சாத்தியம் உள்ளதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இதுபோன்ற நிலைமை இனியும் தொடர்ந்தால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டிப்பாக பல மடங்கு அதிகரித்துவிடும். எனவே, இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தமிழக அரசு வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News