உள்ளூர் செய்திகள்
கொலை

சேரன்மகாதேவி அருகே சொத்து பிரச்சினையில் மோதல்- விவசாயி குத்திக்கொலை

Published On 2022-01-19 04:17 GMT   |   Update On 2022-01-19 04:17 GMT
சேரன்மகாதேவி அருகே விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளத்தை அடுத்த பிள்ளை குளத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மனைவி செல்லத்தாய்.

இவர்களுக்கு சேர்மன் துரை (வயது52), வெட்டும் பெருமாள் (37) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சேர்மன் துரைக்கு, இசக்கியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

வெட்டும் பெருமாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

லட்சுமணபெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின்னர் செல்லத்தாய் இளையமகன் வெட்டும் பெருமாள் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமான சுமார் 110 மாடுகளை வெட்டும்பெருமாள் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்லத்தாய் இறந்து விட்டார். அதன் பின்னர் 110 மாடுகளையும் வெட்டும் பெருமாள் மட்டுமே தனியாக வைத்துக் கொண்டதாகவும், சேர்மன்துரைக்கு மாடுகள் கொடுக்கவில்லை எனவும் கூறி அண்ணன் -தம்பி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வெட்டும் பெருமாள் அரிவாளால் சேர்மன்துரை, அவரது மனைவி இசக்கியம்மாள் (48) மற்றும் அவரது 17 வயது மகன் ஆகிய 3 பேரையும் வெட்டினார்.

இதில் 3 பேருக்கும் தலை மற்றும் கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. உடனே சேர்மன்துரை குடும்பத்தினரும், பதிலுக்கு வெட்டும் பெருமாளை தாக்கினர்.

இரு தரப்பினரும் தாக்கி கொண்ட இந்த சம்பவத்தில் வெட்டும் பெருமாள் முதுகில் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த வெட்டும் பெருமாள் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் வெட்டும் பெருமாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக சேரன் மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News