செய்திகள்
தற்கொலை செய்த கோபிநாத், தனது மனைவி ஜெயப்பிரியாவுடன் இருப்பதை காணலாம் (பழைய படம்)

புதுமாப்பிள்ளை தற்கொலை- மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைது

Published On 2020-10-16 02:38 GMT   |   Update On 2020-10-16 02:38 GMT
உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவி, மாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் கே.கே.குளம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. அவருடைய மகன் கோபிநாத் (வயது 30). டிப்ளமோ (கேட்டரிங்) படித்த இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி ஜெயப்பிரியா (23). உறவினர்களான இவர்களுக்கு, கடந்த 6.12.2019 அன்று திருமணம் நடந்தது.

அதன்பிறகு கோபிநாத் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஜெயப்பிரியா சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி சவுதி அரேபியாவில் இருந்து கோபிநாத் சொந்த ஊருக்கு வந்தார். இதனையடுத்து தனது மனைவியை அழைப்பதற்காக சுருளிப்பட்டிக்கு அவர் சென்றார்.

ஆனால் அவருடன் வருவதற்கு ஜெயப்பிரியா மறுத்து விட்டார். மேலும் ஜெயப்பிரியா, அவருடைய தந்தை பிரேம்குமார், தாயார் விமலா, அண்ணன் நிஜந்தன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை திட்டினர். இதனையடுத்து அவர் தனது வீட்டுக்கு வந்து விட்டார்.

மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனம் உடைந்த கோபிநாத் தனது வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர், தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நான், கோபி எழுதி கொள்கிறேன். எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் நான் உயிரை மாய்த்து கொள்கிறேன். என் சாவுக்கு 7 பேர் காரணம். உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும். என் சாவுக்கு காரணமான ஜெயப்பிரியா (மனைவி), பிரேம்குமார் (மாமனார்), கமலா (மாமியார்), நிஜந்தன் (மைத்துனர்), ஜெயப்பிரியாவின் உறவினர்கள் விமலா, வாசியம்மாள், நர்மதா ஆகியோருக்கு உண்மையான தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாத்தின் தந்தை பாலசுப்பிரமணி, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, கோபிநாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜெயப்பிரியா, விமலா (45), நிஜந்தன் (25), கமலா (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News