செய்திகள்
பெண் சாமியார் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய பிஸ்கெட்டுகள்.

பூஜை செய்வதாக கூறி நகை மோசடி- கைதான பெண் சாமியார் பற்றி திடுக்கிடும் தகவல்

Published On 2020-11-27 11:38 GMT   |   Update On 2020-11-27 11:38 GMT
சூலூரில் பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் நகை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் சாமியார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.
சூலூர்:

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹரிமா என்பவரின் மனைவி உபதுல்லா ரமணா (வயது 40), இவர் கோவை சூலூரை அடுத்த பாப்பம்பட்டியில் பகுதியில் தங்கியிருந்தார். இவர் ஜாதகம் பார்ப்பது மற்றும் குறி சொல்வதாக கூறப்படுகிறது. இதற்காக ஏராளமான பெண்கள் உபதுல்லா ரமணாவை தேடி சென்றனர். அப்போது அங்கு வரும் பெண்களிடம் அவர், பேசி தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை விற்பனை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உபதுல்லா ரமணா, அவருடைய மகன் உபதுல்லா சீனிவாஸ் (22) மற்றும் பட்டா சுரேஷ் (23) ஆகியோரைபோலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், உபதுல்லா ரமணா அளித்த வாக்குமூலத்தில், நான், ஜாதகம் பார்ப்பது, குறிசொல்லி வந்தேன். இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் என்னை தேடி வந்தனர். அப்போது எனக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து குறிகேட்க வரும் பெண்களிடம் நைசாக பேசி அவர்களது நகையை பூஜைக்கு வைக்க வேண்டும் என்று வாங்குவேன். பின்னர் அந்த நகைக்கு பதிலாக, அதேபோன்று போலி நகையை செய்து அவர்களிடம் கொடுத்துவிடுவேன். இதற்கு என்னுடன் இருந்த உபதுல்லா சீனிவாஸ், பட்டா சுரேஷ் ஆகியோர் உதவி செய்தனர். மேலும் தங்க முலாம் பூசப்பட்ட பிஸ்கெட்டுகளையும் பெண்களிடம் ஏமாற்றி விற்றேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கூறுகையில், பெண் சாமியார் உபதுல்லா ரமணாவிடம் பலரிடம் நகையை பெற்று அதற்கு பதிலாக போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியுள்ளார். யார் யாரிடம் போலி நகைகளை விற்பனை செய்தார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குறிசொல்வதாக கூறி யாரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் சாமியாரிடம் நகை வாங்கி ஏமாந்தவர்கள், நகையை பூஜைக்கு கொடுத்தவர்கள், குறி சொல்வதற்காக பணம் கொடுத்தவர்கள் இருந்தால் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என்றனர். மேலும் உபதுல்லா சீனிவாஸ், பட்டா சுரேஷ் ஆகியோர் சூலூர் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News