செய்திகள்
4 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா

கொல்கத்தா டெஸ்ட் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 152/6

Published On 2019-11-23 16:21 GMT   |   Update On 2019-11-23 16:21 GMT
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் அணி 6 விக்கெட்டுக்கு 152 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
கொல்கத்தா: 

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது.

இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
வங்காளதேசத்தை விட 246 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து, வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி 13 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.



தொடர்ந்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் நிதானமாக விளையாடி அரை சதமடித்தார். 39 ரன்கள் எடுத்த நிலையில் மகமதுல்லா காயத்தால் வெளியேறினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர்ரஹிம் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்னும் 3 நாள்கள் மீதமுள்ளதால், இந்தியா எளிதில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
Tags:    

Similar News