செய்திகள்
ராஜேஷ் தோபே

உ.பி., ம.பி, குஜராத், ஹரியானாவை விட எங்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறைவுதான்- மகாராஷ்டிரா

Published On 2021-04-08 10:31 GMT   |   Update On 2021-04-08 10:31 GMT
கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தட்டுப்பாடாக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தோல்வியை மறைக்க மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகிறது என மகாராஷ்டிரா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில் ‘‘சமீபத்திய மத்திய அரசின் தடுப்பூசி குறித்த வெளியிட்ட ஆணையின்படி மகாராஷ்டிரா அரசுக்கு 7.5 லட்சம் டோஸ்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு எங்களை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தவறுகள் சரி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உத்தரவாதம் கொடுத்துள்ளார். நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மாதத்திற்கு 1.6 கோடி டோஸ்கள் பெற விரும்புகிறோம். ஒவ்வொரு வாரத்திற்கும் 40 லட்சம் டோஸ்கள் தேவை. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாங்கள் 6 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடுகிறோம்.



சதாரா, சங்க்லி, பன்வெல் ஆகிய இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தியுள்ளோம். மற்றொரு இடத்தில் இன்றைக்கு மட்டுமே உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News