செய்திகள்
பலியான விவசாயி பழனியாண்டி - 2 மாடுகள் இறந்து கிடப்பதையும் காணலாம்

பாலமேடு பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை- விவசாயி பலி

Published On 2021-04-20 10:22 GMT   |   Update On 2021-04-20 10:22 GMT
பாலமேடு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் புளிய மரம் சாய்ந்து ஆடு, மாடுகளுடன், விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே எர்ரம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி (55). விவசாயம் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

இதைத்தொடர்ந்து மழை வருவதற்கு முன்னரே பழனியாண்டி தனது 2 மாடுகள், மற்றும் 2 ஆடுகளை பிடித்துக் கொண்டு தனது ஓட்டு மாட்டு கொட்டகைக்குள் பிடித்து சென்றார்.

தொடர்ந்து நல்ல மழை பெய்த நிலையில் பழனியாண்டி மாட்டு கொட்டகைக்கு உள்ளேயே அமர்ந்திருந்தார்.

பலத்த சூறாவளி காற்று வீசியதால் மாட்டு கொட்டகைக்கு பின்புறம் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று மாட்டுக் கொட்டகை மீது வேரோடு சாய்ந்தது.

இதில் மாட்டுக் கொட்டகை மொத்தமும் சரிந்து விழுந்ததில் பழனியாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் கொட்டகையில் கட்டியிருந்த 2 மாடுகள், மற்றும் 2 ஆடுகளும் பலியாயின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் புளியமரத்தை அகற்றி பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் புளிய மரம் சாய்ந்து ஆடு, மாடுகளுடன், விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Tags:    

Similar News