செய்திகள்
கொலை

மதுரையில் கஞ்சா தகராறில் வாலிபரை கொலை செய்தவர் கைது

Published On 2021-07-07 10:02 GMT   |   Update On 2021-07-07 10:02 GMT
மதுரையில் கஞ்சா தகராறில் வாலிபரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை குன்னத்தூரில் பயன்படுத்தப்படாத கழிவறை பகுதியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைனக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர் மதுரை கே.புதூர், லூர்து நகர் 7-வது தெருவைச் சேர்ந்த அப்துல்லா பூட்டோ என்பவரின் மகன் முகமது அலிசாகுல் (வயது 24) என்பது தெரியவந்தது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த முகமது அலி சாகுல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் களிமங்கலத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

இந்த நிலையில் தான் அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கஞ்சா தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக குன்னத்தூரில் கஞ்சா போதையில் ரத்த காயங்களுடன் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அவர் குன்னத்தூரை சேர்ந்த செல்வராஜ் மகன் பூவலிங்கம் (19) என்பது தெரியவந்தது. அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து முகமது அலி சாகுலை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குன்னத்தூர் கழிவறை பகுதியில் நான், முத்துக் குமார் உள்பட 4 பேர் ஒன்றாக அமர்ந்து இருந்தோம்.

அப்போது அங்கு வந்த முகமது அலி சாகுல் எங்களிடம் இலவசமாக கஞ்சா கேட்டார். நாங்கள் முதலில் தர மறுத்தோம்.

அப்போது அவர் எங்களின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேச ஆரம்பித்தார். எனவே நாங்கள் அவருக்கு இலவசமாக கஞ்சா கொடுத்தோம். அதன்பிறகும் சாகுல் போதையில் எங்களை மீண்டும் மோசமாக திட்டினார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே சாகுலை கத்தியால் குத்தி கொன்று விட்டோம்“ என்று தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து கருப்பாயூரணி போலீசார் பூவலிங்கத்தை கைது செய்தனர். மேலும் முத்துக்குமார் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News