செய்திகள்
வாக்காளர் பட்டியல் (கோப்புப்படம்)

ஆளும் கட்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பாரபட்சம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்

Published On 2020-11-30 17:35 GMT   |   Update On 2020-11-30 17:35 GMT
ஆளும் கட்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் (கலெக்டர்) தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற
தொகுதிகளில் 30 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 16-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இணையதளத்தில் கண்ட விவரங்களின்படி, சிறப்பு முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்புக்காக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

அதன்படி பார்க்கும்போது புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு சில நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது. அதை நீங்கள் விளக்க வேண்டும். பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள், சிறப்பு முகாம்கள் மூலமாகவா அல்லது நேரடியாகவா அல்லது ஆன்லைன் மூலமாகவா அல்லது எந்த வகையில் பெறப்பட்டது?

பெயர் சேர்ப்பு விண்ணப்பத்தின் மூலம் புதிதாக இணைந்துள்ள வாக்காளர்களின் விவரம் தர வேண்டும். சில புதிய வாக்காளர்களின் வயது விபரம், அதற்கான விண்ணப்பங்களில் காணப்படவில்லை. அந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும், கடந்த பொதுத்தேர்தலில் இருந்து நவம்பர் 16-ந்தேதிவரையில் இறந்துபோன வாக்காளர்களின் பெயர்கள் அளிக்கப்பட வேண்டும்.

இறந்து போனவர்களின் இறப்பு சான்றிதழ், பெயர் நீக்கத்திற்காக விண்ணப்பிக்கும்போது வாக்குச்சாவடி அதிகாரிகளால் வலியுறுத்தப்படுகிறது. அதை கேட்க வேண்டாம் என்று அவர்களிடம் அறிவுறுத்த இருப்பதாக அனைத்து கட்சி
கூட்டத்தின்போது உறுதி அளித்தீர்கள். ஆனால் இதுவரை தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை.

எனவே பெயர் நீக்கத்திற்காக விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்துடன் இறப்பு சான்றிதழை கேட்க வேண்டாம் என்று நீங்கள் அறிவுறுத்துங்கள். அந்த விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு களப் பணியின்போது அதுபற்றி விசாரித்து பின்னர்
பெயரை நீக்க வேண்டும்.

இதற்கான களப்பணிக்கு செல்லும்போது எங்களின் வாக்குச்சாவடி முகவர்-1 மற்றும் முகவர்-2 ஆகியோருக்கு தகவல் அளிக்க தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த, வாக்குச்சாவடி முகவர்களாக நியமிக்கப்படாதவர்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தொடர்பில் வைத்துள்ளனர்.
இது பாரபட்ச நடவடிக்கையை காட்டுகிறது. எனவே அதை தவிர்க்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News