செய்திகள்
வழக்கு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14.70 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

Published On 2021-07-22 10:44 GMT   |   Update On 2021-07-22 10:44 GMT
நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள், வருவாய் குறைந்தவர்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோர் பி.எம்.ஏ.ஒய்-யூ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.
சேலம்:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் எனப்படும் பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஏழை மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டம் பிரதமர் வீட்டு வசதி திட்டம் நகர்ப்புறம் (பி.எம்.ஏ.ஒய்-யூ), பிரதமர் வீட்டு வசதி திட்டம் கிராமம் (பி.எம்.ஏ.ஒய்-ஜி) என 2 வகைப்படும்.

நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள், வருவாய் குறைந்தவர்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோர் பி.எம்.ஏ.ஒய்-யூ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது. தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தல், மானியம் வழங்குதல், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப கட்டுமான பொருட்களைக் கொண்டு வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை கண்காணித்தில் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் சேலம் குடிசை மாற்று வாரிய அலுவலகம் மூலம் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய சேலம், கருங்கல்பட்டி, மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 7 பயனாளிகளுக்கு பல நாட்களாக பணம் வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பயனாளிகள் இது பற்றி தகவல் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், 7 பேருக்கு வழங்கப்பட வேண்டிய 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி மாலா, உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் மீது 120 பி, 167, 409, 420, 13(2), 13(1,டி) மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News