செய்திகள்
கேஎஸ் அழகிரி

அரசியல் பகைமையால் சுமத்தும் களங்கம் துடைத்து எறியப்படும்- கேஎஸ் அழகிரி ஆவேசம்

Published On 2021-02-23 07:08 GMT   |   Update On 2021-02-23 07:08 GMT
அரசியல் பகைமையால் சுமத்தும் களங்கம் துடைத்து எறியப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் கடல்சார் கல்லூரி குறித்து வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதார மற்ற, அவதூறு குற்றச்சாட்டுகளாகும். இதற்கு அரசியல் காட்புணர்ச்சி தான் காரணம்.

2019-ம் ஆண்டு ஜுன் மாத மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் பதிவு எண் 2019 ஜூலை 12-ந்தேதி பதியப்பட்டது. மாணவர் சேர்க்கை பதிவை கப்பல்துறை இயக்குனரகம் உறுதிசெய்த பின்பே பதிவு எண் வழங்கப்படும். இக்கல்லூரியில் படித்த 80 மாணவர்களுக்கும் பதிவு எண் உள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதிகளில் இம்மாணவர்களுக்கு செயல்முறை, நேர்முக மற்றும் இணையவழி தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வானது கப்பல் துறை இயக்குனரகம் மற்றும் மாலுமிகள் அறக்கட்டளையை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வல்லுநர்களால் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் மொத்தமுள்ள 80 மாணவர்களில் 74 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் 14 பிப்ரவரி 2020 அன்று கப்பல் துறை இயக்குனரகம் மற்றும் மாலுமிகள் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.

எனவே, எங்கள் கல்லூரிக்கு முறையான அங்கீகாரம் இருந்ததாலேயே மாணவர்களுக்கு இறுதி தேர்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. எங்கள் கல்லூரியின் அங்கீகாரம் முறையற்ற முறையில் சட்டத்திற்கு விரோதமாக ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை, உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

எங்களுக்கு நீதி கிடைக்க நிறைய ஆதாரங்கள் இருப்பதால் சட்ட ரீதியாக வழக்கை நடத்தி, உரிய நீதியை நிச்சயம் பெற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினையில் அரசியல் பகைமையின் காரணமாக எங்கள் கல்லூரி மீதும், என் மீதும் தேவையற்ற முறையில் களங்கம் கற்பிக்கப்படுகிற முயற்சிகள் விரைவில் துடைத்தெறியப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News