ஆன்மிகம்
கோவிலில் மேற்கூரை பெயர்ந்து கிடப்பதையும், மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து உள்ளதையும் படத்தில் காணலாம்.

தஞ்சையில் சிதிலமடைந்து வரும் காசி விஸ்வநாதர் கோவில் சீரமைக்க கோரிக்கை

Published On 2021-08-31 07:55 GMT   |   Update On 2021-08-31 07:55 GMT
தஞ்சை தெற்கு வீதியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதனை சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை தெற்கு வீதி- எல்லையம்மன் கோவில் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் கோவில். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட கோவில்களுள் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு தெற்கு வீதியில் ஒரு வாயிலும், மற்றொரு வாயில் எல்லையம்மன் கோவில் தெருவிலும் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ராஜகோபுரம், மண்டபம், கருவறை, விமானகோபுரம் ஆகியவை உள்ளது. இங்கு காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நந்தி பலி பீடத்துடன் கூடிய சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நாகலிங்கம், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாககொண்டாடப்படும். மேலும் ஒவ்வொரு பிரதோசத்தன்றும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆடி கிருத்திகையன்றும் விழா விமரிசையாக நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்படும்.

இந்த கோவிலுக்கு தெற்கு வீதியில் இருந்து நுழைவு வாயிலின் மேற்பகுதி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் வாசலின் மேற்குபகுதியில் ஏராளமான வெடிப்புகளும் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே கோவிலுக்குள் செல்லும் நிலை தான் காணப்படுகிறது.

இதே போன்று கோவிலின் சுற்றுச்சுவரின் வடக்குப்பகுதியும் உடைந்து விழுந்த வண்ணம் உள்ளது. கோவிலின் மேல்பகுதியில் ஆங்காங்கே செடிகள் முளைத்து கட்டிடத்தில் விரிசலும் காணப்படுகிறது. இந்த கோவிலுக்குள் அபிஷேகம் செய்வதற்கு கூட தண்ணீர் வசதி கிடையாது. அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் இருந்து சாலையின் மேல் பகுதி வழியாக குழாய் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.

எனவே மிகவும் ஆபத்தான நிலையில் கள்ள கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News