செய்திகள்
பலியான சிறுவன் சுனில்

கரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 11 வயது சிறுவன் பலி

Published On 2021-11-24 03:40 GMT   |   Update On 2021-11-24 03:40 GMT
கரூர் அருகே இன்று அதிகாலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர்:

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்க்கொடி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் (வயது 16), சுனில் (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். ஆறுமுகம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.

சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளியில் படித்து வந்தனர். மண் சுவரில் கட்டப்பட்டு, ஓடு வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில், வீட்டின் வடக்கு மற்றும் மேற்கு பக்க சுவர்கள் மிகவும் பலமிழந்து காணப்பட்டது. ஆனாலும் மாற்று வழியின்றி அதே வீட்டில் தங்கியிருந்தனர்.

நேற்று இரவு வழக்கம் போல் வீட்டிற்குள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென்று மழைக்கு ஊறியிருந்த சுவர்கள் இடிந்து விழுந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்தனர்.

இதில் ஆறுமுகத்தின் இளைய மகன் சுனில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டான். அவன் மீது மண் மூடியதோடு, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த சுனில் ஒரு சில நிமிடங்களில் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான்.

மேலும் இந்த விபத்தில் மூத்த மகன் ஆகாஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். பெற்றோருக்கு காயங்கள் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்டனர்.

உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், மற்றொரு சிறுவனை சிகிச்சைக்காகவும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பசுபதிபாளையம் போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News