செய்திகள்
அஜித் நிவார்ட் கப்ரால்

இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம்

Published On 2021-09-05 21:38 GMT   |   Update On 2021-09-05 21:38 GMT
இருப்பு குறைவு, பதுக்கல் அதிகரிப்பால் இலங்கையில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
கொழும்பு:

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. 

இதனால் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. 

இதனையடுத்து உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை அண்மையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சீனாவுடன் நிலவும் கடன் சுமையால் இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் நிதித்துறை இணை மந்திரி அஜித் நிவார்ட் கப்ரால் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது. சர்வதேச ஊடகங்களின் கருத்தை இலங்கை அரசு நிராகரிக்கிறது. மேலும் பன்னாட்டு நிதியத்திடம் நிதியுதவி கேட்கப் போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Tags:    

Similar News