ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்த போது எடுத்த படம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கொலு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்

Published On 2020-10-19 04:07 GMT   |   Update On 2020-10-19 04:07 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளிய நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவில் மூலஸ்தானத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் இருந்து தியாகசவுந்தரி அம்மன் என்ற உற்சவ அம்மனை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கொலுமண்டபத்தில் எழுந்தருள செய்தனர். அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் எழுந்தருளி இருந்த கொலுமண்டபத்தில் சாமி சிலைகள் மற்றும் பொம்மைகளை அலங்கரித்து கொலு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் கொலுமண்டபம் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தொழிலதிபர்கள் பகவதியப்பன், கங்காதரன் உள்பட பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நேற்று பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து கலந்துகொண்டனர்.

நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, இரவில் வாகன பவனி போன்றவை நடைபெறும்.

10-ம் திருவிழாவான 26-ந் தேதி மாலை 6 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பரிவேட்டை நிகழ்ச்சி மகாதானபுரத்துக்கு பதிலாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஈசான மூலையில் நடக்கிறது. இதில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News