செய்திகள்
விபத்தில் பலியான வெங்கடேசன், டிரைவர் செல்வம்

புதுக்கோட்டை அருகே விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் பலி

Published On 2020-01-12 06:36 GMT   |   Update On 2020-01-12 07:46 GMT
புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்துது. இதில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறினார்.

பின்னர் எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு புறப்பட்டார். அவரை திருச்சி விமான நிலையத்தில் அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசன் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காரை இடையபட்டியை சேர்ந்த டிரைவர் செல்வம் (38) ஓட்டினார்.

நள்ளிரவு நேரம் என்பதால் டிரைவர் செல்வம் காரை அதிகவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அவர்களது கார் கிளிக்குடி வீர பெருமாள்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் கார் டிரைவர் செல்வம் இருவரும் காருக்குள்ளேயே பலியானார்கள். இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் செல்வம் இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், டிரைவர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான வெங்கடேசனின் தாயார் இந்திரா அம்மாள் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News