ஆன்மிகம்
சிவ பூஜை

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம்

Published On 2021-02-15 06:16 GMT   |   Update On 2021-02-15 06:16 GMT
“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
சைவத்தின் மாமந்திரம் “நமசிவாய” எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த “மா மந்திரம்” திருவைந்தெழுத்து, மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.

சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
 
இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில்

‘ந’ என்பது திரோதாண சக்தியையும்,
‘ம’ என்பது ஆணவமலத்தையும்,
‘சி’ என்பது சிவத்தையும்,
‘வா’ என்பது திருவருள் சக்தியையும்,
‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.

மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
 
சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள்.

‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும்,
‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும்.
‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும்,
‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும்,
‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.

சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம்.

‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே.

முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

எப்போது ஓதலாம்?

எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.
Tags:    

Similar News