உள்ளூர் செய்திகள்
மரணம்

சத்தியமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி

Published On 2022-01-15 04:13 GMT   |   Update On 2022-01-15 04:13 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம் பாளையம் பீக்கிரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (75) விவசாயி. இவருக்கு பீக்கிரி பாளையம் செல்லப்பன் தொட்டி என்ற பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது சோளம் பயிரிட்டு உள்ளார்.

சோள தோட்டத்தில் வன விலங்குகள் இரவு நேரத்தில் வந்து நாசம் செய்து வந்தது. இதையடுத்து குருநாதன் இரவு நேரத்தில் தோட்ட காவலுக்கு சென்று வந்தார். இதே போல் சம்பவத்தன்று இரவும் வழக்கம் போல் தோட்ட காவலுக்கு சென்றார். அப்போது இரவு 11 மணி அளவில் ஒற்றை காட்டு யானை சோள தோட்டத்துக்குள் நுழைந்தது. இதைப்பார்த்த குருநாதன் சத்தம் போட்டு யானையை விரட்டினார்.

இதையடுத்து ஒற்றை யானை குருநாதனை நோக்கி ஓடி வந்தது. இதைப்பார்த்து அவர் யானையிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற யானை குருநாதனை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியது.

மேலும் குருநாதனின் இடது கை, இடது கால், மார்பு மற்றும் தலையில் காலால் மிதித்தது. இதையடுத்து குருநாதன் சத்தம் போட்டார். சத்தத்தைக் கேட்டு பக்கத்து தோட்டக்காரர்கள் ஓடி வந்தனர். அப்போது யானையை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து சென்றது.

இதையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த குருநாதனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே குருநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வனத்துறையினரும் விசாரணை நடத்தி யானை தாக்கி இறந்த குருநாதனின் குடும்பத்தினருக்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

Tags:    

Similar News