செய்திகள்
அதிமுக

அ.தி.மு.க.வில் 5 ஆயிரம் பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம்

Published On 2021-02-28 09:33 GMT   |   Update On 2021-02-28 09:48 GMT
அ.தி.மு.க.வில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன். வருகிற சனிக்கிழமைக்குள் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 24-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

முதல் நாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தார்.

இதையடுத்து அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். முதல் நாள் முகூர்த்த தினமாக இருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர்.

மறுநாள் 25-ந்தேதி சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் வழங்கினார்கள். நேற்று வரை சுமார் 3,700 பேர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை கொடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் இன்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் வேட்பு மனு கொடுத்தனர். 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன். சுமார் 5 ஆயிரம் பேர் வரை விருப்ப மனுக்கள் கொடுப்பார்கள் என்று தெரிகிறது.

அவர்களில் இருந்து வேட்பாளர் தேர்வு நடைபெறும். வருகிற சனிக்கிழமைக்குள் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News