உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மக்களின் விழிப்புணர்வால் சென்னையில் குறையும் கொரோனா பரவல் விகிதம்

Published On 2022-01-12 05:43 GMT   |   Update On 2022-01-12 05:43 GMT
சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். முககவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் இருந்தே நோயின் தாக்கம் உயரத் தொடங்கியது.

கடந்த மாதம் 31-ந் தேதியன்று தினசரி பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்முறையாக ஆயிரத்தை தாண்டியது. அப்போது சென்னையில் 589 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.

இதன் பிறகு புத்தாண்டு முதல் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தது. கடந்த 1-ந்தேதி தமிழகம் முழுவதும் 1,489 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னையில் 682 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இப்படி ஒவ்வொரு நாளும் நோயின் தாக்கம் உயர்ந்து கொண்டே சென்றது.

அந்தவகையில் கடந்த 4-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் 2,731 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அன்று சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 1,489-ஐ தொட்டு இருந்தது. இப்படி கொரோனா பாதிப்பு சென்னையில் கிடுகிடுவென உயர்ந்தது.

 


அதற்கு மறுநாள் (5-ந்தேதி) தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கூடுதலாக விதித்தது. அன்று முதல்தான் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று சென்னையில் முந்தைய நாள் பாதிப்பை விட இருமடங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் தினசரி பாதிப்பு 2,481 ஆக அதிகரித்து காணப்பட்டது. இது முந்தையநாள் ஏற்பட்ட பாதிப்பை விட இரு மடங்கு அதிகமாகும்.

கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் சென்னையில் தினசரி பாதிப்பு பெரிய அளவில் குறையவில்லை. 6-ந்தேதியன்று 3,759 ஆகவும், 7-ந்தேதியன்று 4,531 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். கிட்டத்தட்ட தினசரி கூடுதலாக ஆயிரம் பேர் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளில் இருந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். முககவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு முன்பும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கடந்த 5-ந்தேதிக்கு பிறகு அதிகளவில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த 8-ந்தேதியன்று தினசரி பாதிப்பு 5,098 ஆக இருந்தது. இது முந்தையநாள் பாதிப்பை விட 500 என்ற அளவிலேயே அதிகரித்து இருந்தது. ஆனால் அதற்கு முன்பு வரையில் தினசரி பாதிப்பு சுமார் ஆயிரம் அளவுக்கு அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கடந்த 9-ந்தேதியன்று தினசரி பாதிப்பு 6,186 ஆக சென்னையில் பதிவாகி இருந்தது. அதற்கு மறுநாள் தினசரி தொற்று எண்ணிக்கை 6,190 என்ற அளவில் பதிவானது.

இந்த மாதத்தில் முந்தைய நாள் பாதிப்பை விட மறுநாள் பாதிப்பு அன்றுதான் மிகவும் குறைவாக காணப்பட்டது. முன்தினம் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து கூடுதலாக 4 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று தினசரி பாதிப்பு சென்னையில் 6,484 ஆக பதிவாகி இருந்த போதிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு பிறந்த பிறகு நோய்பரவல் விகிதம் 3.7 என்ற அளவில் இருந்ததாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 2.9 என்கிற அளவுக்கு குறைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர் ஒருவர் கூறும்போது, ‘‘கொரோனாவை தடுப்பதில் முக்கிய பங்காற்றுவது முககவசங்கள் மட்டுமே எனவும், எனவே பொது மக்கள் தவறாமல் முககவசம் அணிவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டார்.

சென்னை காவல் துறையில் முககவசம் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. தினமும் 1,000-க்கும் மேற் பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் முககவசம் அணியாதவர்கள் மீது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கொரோனா பரவல் மேலும் குறையும் வரையில் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News