ஆன்மிகம்
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

ஊரடங்கால் கட்டுப்பாடுகள்: குறைந்த அளவிலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

Published On 2020-11-17 04:25 GMT   |   Update On 2020-11-17 04:25 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்களே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்கள் அணியும் காவி வேட்டிகள், மாலைகள் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் இருந்து மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாட்கள் வரையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்குவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தமிழக எல்லையில் 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழுடன் வந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஆண்டு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

இருப்பினும் ஆன்னலைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கார்த்திகை முதல்நாளான நேற்று கோவில்களில் மாலை அணிந்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர். கோவில்களுக்கு சென்று தங்கள் குருசாமி கைகளால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். . மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத சில பக்தர்களும், எப்படியும் ஐயப்பனை தரிசிக்க வழி கிடைக்கும் என்ற நோக்கத்தில் மாலை அணிந்து கொண்டனர்.

தஞ்சை யாகப்பா நகரில் உள்ள ஐயப்பன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.

ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே பூஜை அறையில் தங்களது பெற்றோர் கைகளினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதனால் இந்த ஆண்டு ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

மாலை அணியும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் காவி, கறுப்பு வேட்டிகள் விற்பனை, ஐயப்ப பக்தர்கள் அணியும் மாலைகள் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News