செய்திகள்
நடிகர் அஜித் குமார்

படப்பிடிப்பில் காயமடைந்த அஜித், அரியர் தேர்வு விசாரணை நிறுத்தம், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-20 08:02 GMT   |   Update On 2020-11-20 08:02 GMT
வலிமை படப்பிடிப்பின்போது காயமடைந்த அஜித், அரியர் தேர்வு விசாரணை நிறுத்தம், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# பூட்டானில் 2ம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும், பூட்டான் பிரதமரும் இணைந்து காணொளி வாயிலாக துவக்கி வைத்தனர். அப்போது பேசிய மோடி, பூட்டானின் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணிக்கு இந்தியா உதவி செய்து வருவதாக குறிப்பிட்டார். 

# கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23ம் தேதி திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது. இதுவரை 84.28 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.43 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.60 சதவீதமாகவும் உள்ளது.

# நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் கருப்பாநதி அணை, கடனாநதி அணை மற்றும் ராமநதி அணைகள் ஒரே நாளில் நிரம்பின.

# திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

# திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் ஜனவரி 5ம் தேதி காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். 

# சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று திமுக வெற்றி பெறும் என்று கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

# சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அவரை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

# அரியர் தேர்வு ரத்து தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றபோது, வீடியோ கான்பரன்சிங்கில் ஏராளமான மாணவர்கள் இணைந்ததால் இடையூறு ஏற்பட்டது. இதனால் விசாரணை நிறுத்தப்பட்டது.

# ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜார்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் செல்கிறது.

# ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

# கணக்கீட்டு முறை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது.

# உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று போட்டியில்,  ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். 

# ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

# தன்னை பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக, பீகாரை சேர்ந்த யூ டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Tags:    

Similar News