செய்திகள்
கே.எஸ்.அழகிரி

சுயமரியாதை இல்லாத குழப்பமான கட்சி அதிமுக- கே.எஸ்.அழகிரி தாக்கு

Published On 2019-12-10 07:18 GMT   |   Update On 2019-12-10 07:18 GMT
சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல்:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடி உரிமை தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால் இந்திய ஜனநாயக அடித்தளமே ஆட்டம் காணும். இந்த குடியுரிமை தடை மசோதாவிற்கு இங்கு உள்ள அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது கொடுமையானது. கைகட்டி கூனிக்குறுகி மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பணிந்து உள்ளது.

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். அவர்களது நிலை ஆபத்தில் உள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தமிழகத்திற்கும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை கேட்காமல் சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தினால் விலைவாசி உயரும். பொது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இந்தியாவில் அன்னிய முதலீடு என்பது கிடையாது. முதலீடு இல்லாத காரணத்தினால் உள்நாட்டு வர்த்தகர்கள் முதலீடு செய்வதற்கும் தயங்குகின்றனர். முதலீடு இல்லாததால் தொழில் வளர்ச்சி இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. பணப்புழக்கம் கிடையாது.

சந்தை விற்பனை, உற்பத்தி இல்லாததினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கள் பங்கேற்காத எந்த ஒரு தேர்தலும் மக்களாட்சியை கொண்டு வராது. அதிகார பலம், ஆள் பலம், பண பலம் உள்ளவர்களுக்குத்தான் இது சாதகமாக அமையும். உள்ளாட்சித் தேர்தல் வேண்டாம் என்று தி.மு.க., காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வழக்கு தொடரவில்லை.

முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றம் சென்றுள்ளோம். இட ஒதுக்கீட்டை தமிழக தேர்தல் ஆணையம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வரைமுறை செய்யப்படவேண்டும். குழப்பவாதி அண்ணா தி.மு.க. தான். திமுக கிடையாது. அமைச்சர் ஜெயக்குமார் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News