தொழில்நுட்பச் செய்திகள்
123 பே

இண்டர்நெட் தேவையில்லை: இனி சாதாரண செல்போனிலும் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்- எப்படி தெரியுமா?

Published On 2022-03-09 06:54 GMT   |   Update On 2022-03-09 06:54 GMT
இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம், வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்நெட் இல்லாத சாதாரண செல்போன்களிலும் கூட இனி யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக 'யுபிஐ- 123 பே' என்ற சேவையை அவர் தொடங்கி வைத்தார்.  

இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள் சாதாரண செல்போன் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் டிஜிட்டல் நவீனமயத்தில் பங்கேற்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த 'யுபிஐ123 பே' சேவையில், சாதாரண போன் வைத்திருக்கும் பொதுமக்கள் வங்கிக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். பின் டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். அதன்பிறகு பரிவர்த்தனை செய்யலாம். 

இந்த சேவையில் 4 வகையில் பணம் அனுப்பலாம். சாதாரண போன்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். ஐவிஆர் எண்ணுக்கு கால் செய்து அதில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து பணம் அனுப்பலாம்.

இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் போன்ற கருவியை கொண்டு பணம் அனுப்பலாம். ஆர்.பி.ஐ கொடுத்திருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம், ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News