செய்திகள்
சுவெந்து அதிகாரி

போர்க்களத்தில் சந்திப்போம்... மம்தாவுக்கு சவால் விடுத்த முன்னாள் விசுவாசி

Published On 2021-03-05 17:20 GMT   |   Update On 2021-03-05 17:20 GMT
வரும் 9ம் தேதி நந்திகிராமம் செல்ல உள்ளதாகவும், 10ம் தேதி ஹால்டியாவில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் கடும் சவால் நிறைந்ததாக உள்ளது. மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்த சுவெந்து அதிகாரி உள்பட சில அமைச்சர்களும், பல எம்.பி, எம்.எல்.ஏ.க்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

சுவெந்து அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் அவரை எதிர்த்து தானே போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்திருந்தார். அதன்படி இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மம்தா பானர்ஜி, நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி நந்திகிராமம் செல்ல உள்ளதாகவும், 10ம் தேதி ஹால்டியாவில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

இதுபற்றி சுவெந்து அதிகாரி கூறுகையில், ‘மரியாதைக்குரிய முதல்வர், நந்திகிராமில் போட்டியிடுகிறார். இது மிகவும் நல்லது, வரவேற்கக்கூடியது. ஆனால் நந்திகிராமம் மக்கள், ‘நாங்கள் மிட்னாபூரின் மகனை விரும்புகிறோம், வெளியாட்களை அல்ல’ என்று குரல் எழுப்புகிறார்கள். நாங்கள் உங்களை போர்க்களத்தில் சந்திக்கிறோம். மே 2 ஆம் தேதி, நீங்கள் தோல்வியடைந்து வெளியேறுவீர்கள்’ என்றார்.
Tags:    

Similar News