செய்திகள்
ஜடேஜா

நான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்

Published On 2019-10-14 14:39 GMT   |   Update On 2019-10-14 14:39 GMT
நான் கச்சிதமான ஆல்-ரவுண்டர், பந்து வீச்சு அல்லது பேட்டிங் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக எனது பங்களிப்பு இருக்கும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. இவர் சிறந்த ஆல்-ரவுண்டர். முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் இவரை முழுமையாக பந்து வீச்சில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பேட்டிங்கில் முன்வரிசையில் களம் இறக்கப்படுவதில்லை.

புனே டெஸ்டில் விஹாரிக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் 6-வது இடத்தில் களம் இறக்கப்பட்டார் ஜடேஜா. சிறப்பாக விளையாடிய அவர் 91 ரன்கள் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 225 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் போட்டியில் ஒரு சதம், 12 அரைசதங்கள் அடித்துள்ள ஜடேஜாவின் சராசரி 34.42 ஆகும். ஆடும் லெவன் அணி பேலன்ஸ் அணியாக இருக்க ஜடேஜா முக்கிய காரணமாக இருக்கிறார்.

இந்நிலையில் நான் ஒரு கச்சிதமான ஆல்-ரவுண்டர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘நான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன். என்னால் எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அது பேட்டிங்கா அல்லது பந்து வீச்சா என்பது ஒரு விஷயமே அல்ல.



பந்து வீசினாலும், பேட்டிங் செய்தாலும் இரண்டிலும் என்னுடைய பங்களிப்பை கொடுப்பது அவசியம். பந்து வீசினால் விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டியது அவசியம். பேட்டிங் செய்தால் ஒவ்வொரு இன்னிங்சிலும் ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் என்னை நான் பேட்டிங் ஆல்-ரவுண்டர் அல்லது பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்று பார்க்கவில்லை.

நான் சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறேன் என என்னால் உறுதியாக கூற இயலும். 6-வது இடத்தில் களம் இறங்கினால் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிற்க முடியும். நான் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய செல்கின்றனோ, அப்போதெல்லாம் சற்று நேரம் ஆடுகளத்தில் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அதன்பின் எனது வழக்கமான ஷாட்டுகளை விளையாடுவேன். இது எனக்கு அதிக அளவில் உதவியாக இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News