செய்திகள்
தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

மத்திய அரசு வழங்கும் வரி வருமானம் ரூ.7,586 கோடி குறைந்தது

Published On 2020-02-14 10:17 GMT   |   Update On 2020-02-14 10:17 GMT
2019-20-ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கில் மொத்தத்தில் ரூ.7,586.07 கோடி குறைவு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளதினால், பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018-19-ம் ஆண்டில் மத்திய வரிகளின் பங்காக, மத்திய அரசிடமிருந்து ரூ.30,638.77 கோடி பெறப்பட்டது. அதையடுத்து சென்ற 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்ட 2019-20-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்தில் ரூ.33.978.47 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் இதற்கு மாறாக தற்போது 2019-20-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் திருத்த மதிப்பீடுகளில் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு மத்திய வரிகளில் வழங்கும் நிதிப் பகிர்வு ரூ.26,392.40 கோடி மட்டுமே என்று குறைத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வரி வசூல் எதிர்பார்த்த அளவை விட 2019-20-ம் ஆண்டில் குறைவாகவே வசூலாகியதாலும், 2018-19-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட, உள்ளபடியான மத்திய வரி வசூல் குறைந்ததால், 2019-20-ம் ஆண்டிற்கான மத்திய வரி வசூலில் தமிழகத்திற்கான பங்கில் ரூ. 2,368 கோடி குறைக்கப்பட்டதாலும், 2019-20-ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கில் மொத்தத்தில் ரூ.7,586.07 கோடி குறைவு ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலையை சிக்கலான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மத்திய வரி நிதிப் பகிர்வு அல்லாத பிற நிதி ஆதாரங்களைக் கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News