செய்திகள்
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் போலீசார் விசாரணை

Published On 2021-01-11 18:23 GMT   |   Update On 2021-01-11 18:23 GMT
ஆண்டிப்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில், தேனி-மதுரை சாலையோரம் ஒரே கட்டிடத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்றுமுன் தினம் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்தநிலையில் இரும்பு கம்பியால் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் மர்மநபர்கள் 3 பேர், ஒரு லாரியை ஏ.டி.எம். மையத்தின் முன்புற ரோட்டில் நிறுத்தி விட்டு கொள்ளையடிக்க முயன்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News