ஆன்மிகம்
பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபம் காண்பிப்பதை படத்தில் காணலாம்.

காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-09-21 06:26 GMT   |   Update On 2020-09-21 06:26 GMT
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டது.
கொங்கு மண்டலத்து திருவரங்கம் என போற்றப்படுவது காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் அரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன், ஆய்வாளர் சரண்யா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையில் கோவிலில் தாசர்களுக்கு பக்தர்கள் படையலிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் நான்கு ரத வீதிகளிலும் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி வண்ண மலர்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. மேலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

கோவை ராம்நகர் ராமர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News