செய்திகள்
பாபநாசம் அணை (கோப்புப்படம்)

நெல்லையில் பரவலாக மழை: பாபநாசம்-சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 3 அடி உயர்வு

Published On 2019-09-06 11:12 GMT   |   Update On 2019-09-06 11:12 GMT
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்தமழை பெய்வதாக வானிலை நிபுணர்கள் அறிவித்துள்ளனர். நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, சிவகிரி பகுதியில் விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. பாபநாசம் அணை பகுதியிலும், செங்கோட்டை, தென்காசி பகுதியிலும் கனமழை அவ்வப்போது பெய்தது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 39 மில்லிமீட்டர் மழை பெய்தது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3637.15 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனாலும் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 113 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2.80 அடி உயர்ந்து இன்று காலை 115.80 அடியானது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 125.73 அடியாக இருந்தது. அது ஒரேநாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 128.48 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் நேற்று இருந்த நிலையிலேயே தொடர்ந்து 51.45 அடியாக உள்ளது. இதுபோல் வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளை தவிர மற்ற அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று காலை 9 மணி அளவில் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் வெள்ளமாக கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற அருவிகளில் தொடர்ந்து சுற்றுலா பயணி கள் குளித்தனர்.

Tags:    

Similar News