ஆன்மிகம்
அத்தி வரதர்

அத்தி வரதர் விழாவில் சிறப்பு தரிசனம் தொடக்கம்

Published On 2019-07-05 09:03 GMT   |   Update On 2019-07-05 09:03 GMT
அத்திவரதர் விழாவில் சிறப்பு தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.500 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் தினமும் ஆயிரம் பேர் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 48 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் 2 1/2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

அத்திவரதர் தரிசனம் செய்வதற்கென ஆன்லைனில் கடந்த 2 நாட்களாக ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கான தரிசனம் நேற்று தொடங்கியது.

அதன்படி தினந்தோறும் இரண்டு வேளைகளில் 500 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து 12 மணி வரை 500 பேர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 500 பேர் என மொத்தம் ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் ரூ. 500 செலுத்தி தரிசனம் செய்தனர்.

சிறப்பு தரிசனம் மேற் கொண்டவர்கள் முக்கியஸ்தர்கள் செல்லும் வரிசையில் சென்றனர். அவர்களுக்கு அத்திவரதர் பெருவிழா என அச்சிடப்பட்ட கைப்பையுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு பேட்டரி கார், சக்கர நாற்காலி வழங்கப்பட்டு சிரமம் இன்றி தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசனம் செய்ததோடு மூல வரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. 11-ந் தேதி கருட சேவை விழா நடைபெற உள்ளது.

இதையட்டி அத்தி வரதரை தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை (12 மணி நேரம்) மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நேர கட்டுப்பாடு வருகிற 11-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
Tags:    

Similar News