செய்திகள்
மதுவிருந்து நடந்த சொகுசு விடுதி.

மாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் - 160 பேர் கைது

Published On 2019-05-06 05:05 GMT   |   Update On 2019-05-06 06:23 GMT
மாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:

தமிழகத்தில் போதை, மது விருந்து கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்புக்குள் மது விருந்து போதையில் ஆட்டம் போட்ட கேரள கல்லூரி மாணவர்கள் 150 பேரை போலீசார் மடக்கினர்.

இதே போல் தற்போது மாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு நேற்று இரவு மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு விடுதியில் ரவுடிகள் சிலர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் ஏராளமான போலீசார் நள்ளிரவு 12 மணி அளவில் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது விடுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஏராளமான வாலிபர்களும், பெண்களும் போதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் அரைகுறை உடையுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

மொத்தம் 160 பேர் மது விருந்தில் கலந்து கொண்டது தெரிய வந்தது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கென்று தனியாக பாதுகாப்புக்காக ‘பாக்சர்களும்’ இருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


சிக்கிய அனைவரும் சென்னை, ஆந்திராவை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஆவர். கோவையை சேர்ந்த வாலிபர்களும் உள்ளனர். இவர்களில் 3 ஜோடி கணவன்-மனைவியும் இருக்கிறார்கள்.

வார விடுமுறை நாட்களில் அவர்கள் மொத்தமாக மது அருந்தி கும்மாளமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கி கொண்டனர்.

பிடிபட்ட அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய முகவரியை கேட்டு போலீசார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். பெற்றோரை வரவழைத்து எச்சரிக்க முடிவு செய்துள்ளனர்.

திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மது விருந்தில் பங்கேற்ற வாலிபர்களின் பெற்றோரை வரவழைத்து போலீசார் எழுதி வாங்கினர்

மதுவிருந்து நடந்த விடுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரில் கஞ்சா பொட்டலங்களும் இருந்துள்ளன. அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விருந்து நடந்த விடுதியில் இருந்து பெட்டி பெட்டியாக வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார்? கஞ்சா கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதியில் நடந்த மது விருந்தில் பங்கேற்று 160 பேர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News